(நிகழ்ச்சிகள்
உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன)
கடலூரைச்
சேர்ந்தவர் சுப்புரெத்தினம். அவரது மனைவி கலைமகள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்
இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர் !
சுப்புரெத்தினம்
தமிழக அரசுத் துறையில் உயர்பதவி ஒன்றில் பணியாற்றி
ஓய்வு பெற்றவர். இப்பொழுது அவரது அகவை 80. கலைமகள் இல்லத்தரசி; 70 அகவையானவர். அவர்களது
ஒரே மகன் பெயர் இளங்கதிர். பொறியியல் படிப்பில் பட்டயம் பெற்றவர். பணிக்குச் சேர்ந்தபின்
பகுதிநேரப் படிப்பில் சேர்ந்து பட்டம் (B.Tech) பெற்றவர் ! இப்பொழுது அவரது அகவை
45-ஐக் கடந்துவிட்டது.
முதல்
மகள் தமிழ்க்குயில், பொறியியல் பட்டதாரி – 42 அகவையைக் கடந்தவர். திருமணத்திற்குப்
பின் அரசு சார்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் ! கணவரும் தனியார் நிறுவனம்
ஒன்றில் பணிபுரிபவர் !
இரண்டாவது
மகள் பெயர் அரசி. 38 அகவை கடந்தவர். கணினி
நுட்பப் படிப்பில் பட்டம் பெற்றவர். திருமணம் ஆகி, கணவருடன் வாழ்ந்து வருகிறார் !
சுப்புரெத்தினம்
அரசுத் துறையில் பணியாற்றுங் காலத்தில் தன்னாலியன்ற அளவுக்குப் பிறருக்கு உதவி செய்ய
வேண்டும் என்னும் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர். அவரால் கைதூக்கி விடப்பட்டவர்கள்
எண்ணிக்கை இருபதுக்கு மேலிருக்கும் !
இளங்கதிர்,
பட்டயப் படிப்பை முடித்த பிறகு, அவரைப் பொருத்தமான வேலை எதிலாவது சேர்த்துவிட வேண்டுமென்று
அவர் தந்தை கருதினார்; அதற்காகப் பல வழிகளிலும் முயன்றார் – அவரது முயற்சி குறிப்பாக
நட்பு வட்டாரத்தில் மிக அழுத்தமாகப் பதிவாகி இருந்தது.
பொறியியல்
பட்டயப் படிப்புக்குப் பின் கணினிப் பயன்பாட்டியலில் ஒன்றரை ஆண்டுப் படிப்பான இன்னொரு
பட்டயப் படிப்பையும் இளங்கதிர் முடித்திருந்தார். இதனால் கணினி இயக்கத்தில் வல்லமை
உடையவராகத் திகழ்ந்தார் !
சுப்புரெத்தினத்தின்
நண்பர் ஒருவரது முயற்சியால் இளங்கதிருக்கு சென்னையில் உள்ள சீருந்து வனைவுத் தொழிற்சாலை
(CAR PRODUCTION FACTORY) ஒன்றில் வேலை கிடைத்தது. அவர் தங்குவதற்கு அறை ஒன்றையும்
ஏற்பாடு செய்து கொடுத்தார் சுப்புரெத்தினம் !
இயல்பிலேயே
நல்லொழுக்கமும் நற்குணங்களும் நிறைந்த பிள்ளையாக வளர்ந்த இளங்கதிர், ஒவ்வொரு மாத முடிவிலும் தனது ஊதியத்தை
அப்படியே கொண்டுவந்து தாயாரிடம் கொடுத்து வாழ்த்துப் பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
தாய் தந்தை இருவரிடமும் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தார் இளங்கதிர் !
எழினியானது (MOBILE) மக்களிடம் அவ்வளவாகப் புழக்கத்திற்கு வராத
அந்தக் காலத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் துழனி (TELEPHONE) மூலம் பெற்றோரிடமும் தங்கைகளிடமும்
பேசுவதை இளங்கதிர் தவறவிட்டதே இல்லை !
ஏறத்தாழ
மூன்றாண்டுகள் அவரது பணிச் சூழல் இவ்வாறாக மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருந்த நேரத்தில்,
அவருக்கு இணையான பதவி ஒன்றை வகித்து வந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த இராமராஜன் என்பவர்
இளங்கதிருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார் !
இந்தப்
பழக்கம் இராமராஜன், தனது வீட்டிற்கு இளங்கதிரை எப்போதாவது உணவுக்கு அழைக்கும் அளவுக்கு
நீண்டது. இந்தச் செய்தியை இளங்கதிர் தன் பெற்றோரிடமும் பகிர்ந்துகொண்டார். சுப்புரெத்தினம் தன் மகன் இளங்கதிரிடம்
தக்க விழிப்புரைகளை வழங்கினார். முன்பின் தெரியாத
ஒருவர் தன் வீட்டிற்கு உன்னை ஏன் அழைக்க வேண்டும், அவர் வீட்டிற்கு நீ செல்வது எனக்குச்
சரியெனத் தோன்றவில்லை, எனவே செல்வதைத் தவிர்த்துவிடு என்று அறிவுரைகளை வழங்கினார்
!
இராமராஜனும்
அவர் மனைவி ஓவியாவும் இளங்கதிரிடம் இனிமையாகப் பேசி அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு இளங்கதிரை
வரவழைக்கத் தொடங்கினர். ஓவியா கல்கி சாமியாரின் பக்தை. இளங்கதிரையும் மெல்ல மெல்ல கல்கி
சாமியாரின் பக்தனாக அவர் மாற்றலானார். கல்கி சாமியாரைக் காண்பதற்கு மாதம் ஒருமுறையாவது
இளங்கதிரையும் அழைத்துக்கொண்டு ஓவியா சாமியாரின் இருப்பிடத்திற்குச் செல்லலானார் !
சுப்புரெத்தினமும்
அவர் மனைவியும் ஒருமுறை, தம் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்த போது, தங்குவதற்கு
இடம் ஏற்பாடு செய்வதாகச் சொல்லி இராமராஜன் வீட்டில் தங்கவைத்தார் இளங்கதிர். அங்கு
வந்திருந்த ஓவியாவின் தாயார் சுப்புரெத்தினத்தின் மனைவியிடம், தன் மகளைப் பற்றிச் சில
கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் ! அந்தக் கருத்துகளைக் கேட்டு விழிப்படையாத கலைமகள்,
தன் கணவர் சுப்புரெத்தினத்திடமும் சொல்லாமல் விட்டுவிட்டார் !
தனியாக
அறை எடுத்துத் தங்கியிருந்த இளங்கதிர், பெற்றோரிடம் சொல்லாமல் அதை விட்டுவிட்டு, இராமராஜன்
வீட்டிலேயே தங்கலானார். உணவு, உறைவிடம் இரண்டும் அங்கேயே என்னும் நிலை நிலவியது !
கல்கி
சாமியார் பக்தையாக இருந்த ஓவியா ஏனோ தெரியவில்லை, சீரடி சாய்பாபா பக்தையாக மாறினார்
! இளங்கதிரையும் தன்னைப் பின்பற்றி சாய்பாபா பக்தர் ஆக்கினார். இருவரும் பல ஊர்களுக்குச்
சாய்பாபா கோயில்களுக்குச் செல்லலானார்கள்
!
மகனை
இராமராஜன் குடும்பத்தின் பிடியிலிருந்து மீட்பதற்கு சுப்புரெத்தினம் பல வழிகளிலும்
முயன்றார். காவல் துறையினரின் உதவியுடன் சில முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் எதுவுமே
பயனளிக்க வில்லை !
பன்னிரண்டு
ஆண்டுகள் பெற்றோருடன் உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொண்டு இராமராஜன் குடும்ப உறுப்பினராகவே
இளங்கதிர் இயங்கினார். அவர் வருமானம் முழுவதையும் அந்தக் குடும்பமே அடைந்து மகிழ்ந்தது !
பன்னிரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் எழினி வாயிலாகத் தன் தாயாரிடம் பேசி, தன் உறவைக் குடும்பத்தினருடன்
புதுப்பித்துக் கொண்டார் இளங்கதிர். அப்பொழுது அவர் இன்னொரு நிறுவனத்தில் துணை மேலாளராக
மாதம் ஒரு இலட்சத்து இருபதாயிரம் உருபா சம்பளத்தில் பணியில் இருந்தார் !
வீட்டிற்கு
வா என்று அழைத்தார் சுப்புரெத்தினம். வந்தார்; அவரது சேமிப்பில் ஒரு பைசாக் கூட இல்லை
என்பதை அவர் தெரிந்துகொண்டார். பணம் வேண்டாம், மகன் வந்தால் போதும் என்று அவர் எண்ணினார்.
40 அகவையான அவருக்குத் திருமணம் செய்து வைக்க முயன்றார்; ஆனால் இளங்கதிர் மறுத்துவிட்டார்
!
இப்பொழுது
இளங்கதிருக்கு அகவை 46. தான் பார்த்த வேலையை உதறிவிட்டு, ஏதோ தொழில் செய்வதாகக் கூறுகிறார்.
சீரடி சாய்பாபா பக்தையும், பக்தனும் இப்போது
சிவ பக்தர்கள். கோயில் கோயிலாக இருவரும் செல்கிறார்கள் !
ஏறத்தாழ
25 ஆண்டுகளில் அவர் ஈட்டிய சம்பள வருமானம் சில கோடிகள் வரும். ஆனால் பெற்றோருக்குத்
தந்தது உருபா 5 இலட்சம் அளாவுக்கு இருக்கலாம். எஞ்சிய வருமானம் எல்லாம் இராமராஜன் குடும்பத்தாரிடம்
அடைக்கலமாகிவிட்டது !
இளங்கதிர்
தன் பெற்றோரைச் சந்தித்து இன்றைய நிலையில் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தந்தையின்
அகவை இப்போது 80. தாயார் 70. திசை மாறிய பறவையாகிவிட்ட இளங்கதிர் பெற்றோரின் இறப்பிற்காவது
வருவாரா ? தெரியாது ! சுப்புரெத்தினம் தன் மன வலியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தன் வாழ்நாளைத்
தமிழ்ப் பணியில் கழித்து வருகிறார் ! தாயாரின் உடைந்த நெஞ்சம் இனி ஒட்டி உயிர்ப்படையப்
போவதில்லை !
இராமராஜனும்
ஓவியாவும், சுப்புரெத்தினம் குடும்பத்திற்கு ஏற்படுத்திய வலியை யாராலும் அளவிடமுடியாது.
சுப்புரெத்தினம் வீட்டு வரவேற்பறையில் இராமராஜனும்
ஓவியாவும், துன்பத்தைக் கொண்டுவந்து மூட்டை
மூட்டையாகக் கொட்டி வைத்து அதையே மூச்சுக் காற்றாகச் சுவாசிக்க வைத்து, அதையே மூன்று வேளையும் உணவாக உண்ண வைத்து, அதிலேயே
படுத்துறங்கிக் காலங்கழிக்கவும் வைத்திருக்கிறார்கள் ! சுப்புரெத்தினம் கலைமகள் இணையரின்
வேண்டுதல் ஒன்று தான் ! அது ”திசை மாறிய பறவை எங்கிருந்தாலும் வாழ்க ! திசை மாற்றிய
வல்லூறுகளும் எங்கிருந்தாலும் வாழ்க” !
ஆண் பிள்ளைகளைப்
பெற்றிருக்கும் குடும்பத்தார் ஒவ்வொருவரும் சுப்புரெத்தினம் குடும்பத்தாரின் துன்ப
நிலையைப் பார்த்தாவது விழிப்படைக என்பதே கட்டுரையாளரின் வேண்டுகோள் !
--------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்,
{திருவள்ளுவராண்டு:
2054, நளி (கார்த்திகை) 17]
{03-12-2023}
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக