திசை மாறிய பறவைகள் !

பெற்றோரை மதிக்காத பேதைப் பறவைகள் !

திசை மாறிய பறவை (08)

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுந்தரப் பெருமாள் கோயிலைச் சேர்ந்தவர் சின்னையன். வேளாண் பெருங்குடியைச் சேர்ந்த அவர் சொந்தமாக இரண்டு ஏக்கர் நன்செய் நிலம் வைத்திருந்தார். வேளாண்மையே அவரது குடும்பத்திற்கு வாழ்வாதாரம் !

 

அவரது மனைவி மரகதம் உதிரிப் பூக்களை வாங்கி வந்து சரமாகத் தொடுத்து கோயில் வாசலில் அமர்ந்து வணிகம் செய்துவந்தார். சின்னையன்மரகதம் இணையருக்கு இரண்டு பெண்  குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. தலைச்சன் குழந்தை பெண்ணாகப் பிறந்தது.  இப்போது அதன் அகவை 23.  மல்லிகா என்று பெயர்.  கும்பகோணத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மாதம் பதினைந்தாயிரம் உருபா சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தாள் !

 

இரண்டாவது பெண்ணுக்கு அகவை 17. பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வந்தாள். மூன்றாவதாகப் பிறந்த ஆணுக்கு அகவை 10. நான்காவது படித்து வந்தான் ! மல்லிகா, கலையியல் வாலை (B.A) பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றவள் !

 

சின்னையனின் வேளாண்மைத் தொழிலிலிருந்து குடும்பச் செலவுகளுக்கு ஓரளவு வருமானம் வந்ததே தவிர சேமிப்பு என்று  அவரால் எதையும் மிச்சப்படுத்த முடியவில்லை. மல்லிகாவின் சம்பளம், அவள் தாய் மரகதத்தின் பூ வணிகம் ஆகியவற்றிலிருந்து சிறிது சிறிதாகச் சேமித்து மல்லிகாவுக்கு எட்டு பவுன் அளவுக்கு மரகதம் நகைகள் வாங்கி மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தார் !

 

ஈராண்டுகள் கழித்து, மல்லிகாவுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்பது சின்னையன்மரகதம் இணையரின் திட்டம். மல்லிகா, தமிழ்நாடு தேர்வாணைக் கழகத்தின் தொகுதி IV தேர்வு எழுதி. அதன் முடிவுக்காகக் காத்திருந்தாள். தேர்வுக்கான முன்னாக்கப் பணிகளை நல்லமுறையில் அவள் செய்திருந்ததால், வாய்ப்புக்  கிடைக்கும் என்று அவள் நம்பியதில் வியப்பில்லை !

 

அவளது நம்பிக்கை வீண்போகவில்லை. அடுத்த சில மாதங்களில் அவளுக்குத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணி வாய்ப்பு கிடைத்தது. அன்றாடம் இருப்பூர்தி (TRAIN) மூலம் சுந்தரப்பெருமாள் கோயிலிலிருந்து  தஞ்சாவூருக்குப் பணிக்கு வந்து சென்றாள் !

 

இவ்வாறு சின்னையனின் குடும்ப வாழ்க்கை ஒரே நேர்க்கோட்டில் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது. வேலைக்குச் செல்லும் பெண்கள்அதுவும் நிலைப்புத் தன்மை (REGULAR JOB) கொண்ட வேலைக்குச் செல்லும் பெண்கள், சற்று அழகாகவும் இருந்துவிட்டால், வல்லூறுகள் அவர்களைக் கொத்திக்கொண்டு போக வட்டமிடுவது வாடிக்கையான கதையாயிற்றே !

 

அன்றாடம் இருப்பூர்தியில் சென்று வரும் மல்லிகாவிடம் மதன் என்றொரு வல்லூறு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பழகத்தொடங்கியது.  தான் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் துணைப் பேராசிரியராக இருப்பதாகவும், மயிலாடுதுறைக்கு அருகில்  உள்ள குத்தாலம் தான் தனது சொந்த ஊர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான் ! இருவருக்கும் இடையேயான அறிமுகம் விரைவில் காதலாக மலரத் தொடங்கியது !

 

சிரிக்கச் சிரிக்கப் பேசும் மதனின் பேச்சில் மல்லிகா மயங்கிப் போனாள். காதல் வயப்பட்ட யாரும் தனது இணையை முழுவதுமாக நம்புவது என்பது உலகம் தோன்றிய காலம் முதல் நடந்துவரும் செயல் தான். மல்லிகா, மதனை முழுவதுமாக நம்பினாள். துணைப் பேராசிரியராக இருக்கும் மதன் தன் கணவனாக வந்தால், தங்கள் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்று கனவு கண்டாள் !

 

இந்தக் காதல் செய்தி சின்னையன் வீட்டிற்கு அரசல் புரசலாகத் தெரியவந்தது. சின்னையன் தன் மகளிடம் மதனைப் பற்றி உசாவினார். துணைப்பேராசிரியர் பணி, சொந்த ஊர் குத்தாலம் என்னும் இரண்டைத் தவிர அவளால் மதனைப் பற்றிய வேறு செய்திகள் எதையும் சொல்லமுடியவில்லை. அவனைப் பற்றிய கூடுதல் செய்திகள் எதுவும் தெரியாமல், மகள் இப்படி மயங்கிவிட்டாளே என்று சினம் கொண்ட சின்னையன், மகளைக் கண்டித்தார் !

 

உலகம் மிகவும் கெட்டுக் கிடக்கிறது மல்லிகா, உன்னை அவன் உண்மையிலேயே விரும்புகிறான் என்றால், அவன் படிப்பு என்ன, பணி என்ன, எந்தக் கல்லூரியில் பணி,  சம்பளம் எவ்வளவு, பெற்றோர் பெயரென்ன, குடும்ப உறுப்பினர்கள் யார் யார், குடும்பத்தின் பொருளாதார நிலை என்ன, வீட்டு முகவரி என்ன, என்பன போன்ற அனைத்துச் செய்திகளையும் உன்னிடம் சொல்லியிருக்கவேண்டும். இவற்றையெல்லாம் சொல்லாமல் ஒருவன் உன்னிடம் பழகுகிறான் என்றால், அவனது நோக்கம் தவறானது என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும். என் மனதுக்கு அவனது செயல்கள் ஐயத்தைத் தருகின்றன; எனவே அவனை இன்றுடன் மறந்துவிடுஎன்று அறிவுரைகள் சொன்னார் !

 

சின்னையனின் அறிவுரைகள் எதுவும் மல்லிகாவின் மனதில் பதியவில்லை. அவர் சொல்லிய கருத்துகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் அவள் அணியமாக இல்லை. சரி ! குத்தாலத்திலுள்ள அவனது வீட்டு முகவரியைக் கேட்டு வந்து நாளை சொல் என்று சொல்லிவிட்டு அன்றைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்  சின்னையன் !

 

மறுநாள் இருப்பூர்திப் பயணத்தின் போது, மதனின் வீட்டு முகவரியைக் கேட்டாள். ஒரு முகவரியை அவன் சொன்னான். வீட்டிற்கு வந்ததும் தந்தையிடம் அதைத் தெரிவித்தாள். அதைக் குறித்துக்கொண்ட சின்னையன் அடுத்த நாள் குத்தாலம் சென்று உசாவியறிய முயன்ற போது அப்படியொரு முகவரியே இல்லை என்பதை அறிந்து திடுக்கிட்டுப் போனார் !

 

வீட்டிற்கு வந்ததும் மல்லிகாவை அழைத்து, தான் குத்தாலம் சென்று வந்த செய்தியையும், அங்கு அவன் குறிப்பிடும் முகவரியில் வேறொரு மளிகைக் கடைக்கார்ர தான் இருக்கிறார் என்றும் அவருக்கும் மதனுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்து, அவனை இன்றோடு மறந்துவிடு என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் !

 

தந்தையின் பேச்சினை நம்புவதற்கு மல்லிகா அணியமாக இல்லை. இருவரையும் பிரிக்கத் தந்தை முயல்கிறார் என்றே அவள் நம்பினாள். மறுநாள் அலுவலகம் செல்ல இருப்பூர்தியில் செல்கையில், மதனிடம் அனைத்தையும் விரிவாகச் சொன்னாள். அவன் உடனே விழிப்படைந்து, நம்மைப் பிரிப்பதற்கு உன் தந்தை முயல்கிறார், அதற்கு இடம் கொடுத்துவிடாதே; நாம் சிதம்பரம் சென்று பதிவுத் திருமணம் செய்துகொண்டு, மாலையும் கழுத்துமாக உன் வீட்டிற்குச் சென்றால், அப்போது வேறு வழியில்லாமால் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்று  கூறிவிட்டுத் தன் திட்டத்தையும் விளக்கினான் !

 

சிதம்பரத்தில் உள்ள பதிவாளர் அலுவலகம் சென்று விண்ணப்பம் தந்து நமது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். இன்றிலிருந்து 15 –ஆம் நாள் உன்னுடைய கல்விச் சான்றுகளையும், தேவையான நகைகளையும் எடுத்துக்கொண்டு கும்பகோணம் வந்துவிடு. அங்கிருந்து சிதம்பரம் சென்று நாம் திருமணம் செய்துகொள்வோம்; அதுவரை உன் வீட்டாரிடம் நீ எதுவும் சொல்லிவிடாதே என்று கேட்டுக்கொண்டான் !

 

அவர்கள் திட்டப்படியே கல்விச் சான்றுகளையும், நகைகளையும் தனது கைப்பைக்குள் வைத்து ,மறைத்துக்கொண்டு, அலுவலகம் செல்வதாகச் சொல்லிப் புறப்பட்டாள்.  சுந்தரப் பெருமாள்கோயில் இருப்பூர்தி நிலையம் வந்ததும் அங்கு ஒரு உந்துருளியில் (MOTOR CYCLE) காத்திருந்த மதன், மல்லிகாவை அழைத்துக்கொண்டு, கும்பகோணம் நோக்கி விரைந்தான். சின்னையனின் பக்கத்து வீட்டுக்காரர் அவர்களைப் பார்த்துவிட்டு, சின்னையனுடன் எழினி மூலம் தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துரைத்தார் !

 

சின்னையனும் மரகதமும், ஒரு வாடகை மகிழுந்தை ஏற்பாடு செய்துகொண்டு, ஒரு ஊகத்தில் கும்பகோணம் இருப்பூர்தி நிலையம் சென்றனர். அப்போது தஞ்சையிலிருந்து சென்னை செல்லும்  விரைவு இருப்பூர்தி (EXPRESS TRAIN) 2-ஆவது நடைமேடையருகே வந்து நின்றது தன் மகள் மல்லிகா இன்னொரு ஆடவனுடன் அந்த வண்டியில் ஏறுவதைக் கவனித்துவிட்ட சின்னையன் தன் மனைவியுடன் ஓட்டமும் நடையுமாக ஓடிச் சென்று அதே பெட்டியில் ஏறிவிட்டார். வண்டி புறப்பட்டு கதிப்பு (வேகம்) எடுக்கத் தொடங்கியது !

 

பெற்றோரைக் கண்ட மல்லிகா திடுக்கிட்டுப் போனாள். சின்னையன் மகளைப் பற்றியிழுத்துத் தன்னுடன் அணைத்துக்கொண்டுநிறுத்துச் சங்கிலியை (ALARM CHAIN)  இழுத்தார். நிலைமையைக் கண்ட மதன் அங்கிருந்து நழுவி மறைந்தான். மல்லிகா மதனைத் தேடி ஒருபுறம் இழுக்க, சின்னையன் அந்தப் பெட்டியின் வாயிலை நோக்கி மகளை இழுக்க, அந்தப் போராட்டத்தில் நிலை தடுமாறிய சின்னையன் இருப்பூர்தியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். அவர் விழுவதைக் கண்ட  மரகதமும் ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்தாள். தந்தை தாய் இருவரும் ஓடும் வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டதைக் கண்டாள் மல்லிகா. அவள் கண்களை மறைத்திருந்த காதல் பித்து அந்த ஒரு நொடியில் விலகிவிட,  அவளுள் உறங்கிக் கிடந்த பெற்றோர் மீதான பற்று (பாசம்) கதுமென விழித்துக்கொண்டது. அவர்களை எப்படியாவது  காப்பாற்ற வேண்டும் என்னும் வெறி தோன்றியது. அவ்வளவு தான், அவளும் ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்தாள் !

 

அடுத்த சில நிமிடங்களில் வண்டி நின்றது. ஆனால் இருப்பூர்தித் தடத்தில் கொட்டிக் கிடந்த சரளைக் கற்கள் மூவரது உயிருக்கும் முடிவுரை எழுதத் துவங்கியிருந்தது. வண்டியின் வலவர் (DRIVER), காப்பாளர் (GUARD) உள்படப் பலரும் ஓடி வந்து பார்த்தனர். அங்கே மூச்சடங்கிய மூன்று உடல்களைத் தான் அவர்களால் காண முடிந்தது !

 

திசை மாறிப் பறக்கத் தொடங்கிய பறவை தன் உயிரை இழந்துடன், பெற்ற தாய் தந்தையரின் உயிர்களையுமல்லவா பலிவாங்கிவிட்டது !


எந்தப் பெற்றோரும் தம் மகள் / மகனின் நல்வாழ்வுக்குத்  தீங்கு விளைவிக்க எண்ணுவதில்லை. ஆனால் காதல் வயப்படும் பிள்ளைகளுக்கு ஏன் இந்த உண்மை புரிவதில்லை ? காதலுக்குக் கண்ணில்லை என்பது இதுதானோ ?

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

திசை மாறிய பறவைகள்வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2054, சிலை (மார்கழி) 14]

{30-12-2023}

-----------------------------------------------------------------------------------------------