பெற்றோரை மதிக்காத பேதைப் பறவைகள் !

இராமசுப்ரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமசுப்ரமணியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திசை மாறிய பறவை (05).

 

(நிகழ்ச்சிகள் உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன)

 

திருவாரூரை அடுத்த எண்கண்ணைச் சேர்ந்தவர் இராமசுப்ரமணியன். பள்ளி ஆசிரியர் அவரது மனைவி சுவர்ணமாலா. இவர்களுக்கு ஒரே பிள்ளை. பெயர் திருமாலழகன். இவர் சிதம்பரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார் !

 

நான்காண்டுகள் படிப்பு முடிந்த நிலையில் ஏழெட்டுப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்திருந்தார். மீண்டும் மீண்டும் முயன்ற போதும் ஒருசில பாடங்களில் தேர்ச்சி பெற்றாரே தவிர நிலுவை வைத்திருந்த எஞ்சிய பாடங்களில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் மனதால் களைத்துப் போன அவர் தேர்வு எழுதுவதைக் கைவிட்டுவிட்டு, சென்னையில் சொந்தமாக ஒரு முகமையைத் தொடங்கி சில எந்திரங்களை வாங்கி விற்பனை செய்யலானார் !

 

இந்தச் சூழ்நிலையில் கோட்டைப் பட்டினத்தைத் சேர்ந்த சற்குணம் என்பவரது மகள் புவனச் செல்வியை அவர் திருமணம் செய்துகொண்டார். அவராக விரும்பித் தேர்வு செய்த பெண் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் சுவாமிமலை முருகன் கோயிலில் வைத்துத் திருமணம் நடைபெற்றது !

 

சென்னையில் தனிக்குடித்தனம். ஒரு பெண் குழந்தை பிறப்பு. சொந்தமாகத் தொழில் என்று அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே ஓடிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொழில் செய்து வந்த அவர், வரவுக்கு மீறிய வாழ்க்கைச் செலவால் தொழிலில் பெரும் இழப்பைச் சந்திக்க நேர்ந்தது !

 

பெற்றோர் எண்கண்ணில்; பிள்ளை தன் மனைவி மகளுடன் சென்னையில். பிள்ளையின் தொழில் இழப்பைச் சந்தித்து வந்த வேளையில் அதைத் தூக்கி நிறுத்த பெற்றோர் தம்மிடமிருந்த சேமிப்புகளை மகனின் பக்கம் திருப்பிவிட்டனர். ஓரிரு ஆண்டுகளில் பெற்றோரும் சேமிப்புக் குறைந்து வலுவிழந்து போயினர் பிள்ளையும் கடன் கொடுத்தவர்களின் நெருக்குதல்களுக்கு ஆளானார் !

 

விற்பனை செய்ய எந்திரங்களைக் கடனுக்கு (CREDIT BASIS) கொடுத்த நிறுவனங்களின் நெருக்குதல் ஒருபுறம்; அந்த எந்திரங்களைக் கடனுக்கு வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் தமது கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய அவலம் மறுபுறம் என்று திருமாலழகன் இருபுறமும் அடிவாங்கிக் கிழிந்துபோன மத்தளமாகிப் போனார் !

 

ஒருகட்டத்தில் தனது தொழில் முகமையை மூடிவிட்டு, மனைவியையும் மகளையும் மாமனார் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் தலைமறைவானார். அவர் செய்த நேர்மையற்ற, ஆனால் அறிவார்ந்த செயல் என்ன வென்றால், கடன்காரர்கள், அவரது பெற்றோர் முகவரியையோ, மாமனார் வீட்டு முகவரியையோ கண்டுபிடிக்க முடியாமல் தடயங்களை அழித்தது தான் !

 

சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த அவர், இடையில் முனைப்பாக முயன்று பொறியியல் கல்லூரியில் நிலுவை வைத்திருந்த பாடங்களில் தேர்வு எழுதி அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆனால் பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான அன்னிலைச் சான்றினை (PROVISIONAL DEGREE CEWRTIFICATE) பல்கலைக் கழகத்திலிருந்து பெற அவரால் முடியவில்லை !

 

இந்தச் சூழ்நிலையில் வளைகுடா நாடு ஒன்றுக்குச் சென்று அங்கு வேலை தேடிக்கொள்ள முடிவு செய்தார். உறவினர் ஒருவரின் உதவியால் கடவுச் சீட்டு (PASS PORT) பெற்ற அவர் சிலரது பண உதவியால் வளைகுடா நாட்டுக்குச் சென்றுவிட்டார். சென்ற இடத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொண்ட அவர் அந்த வேலையில் நிலைப்புப் பெறவும், கூடுதல் சம்பளம் பெறவும் பொறியல் பட்டச் சான்று தேவைப்பட்டது !

 

கடவுச் சீட்டு வாங்கிட உதவி செய்த அதே உறவினர், பல்கலைக் கழகத்திற்கு அவரது பெற்றோருடன் சென்று அன்னிலைச் சான்றினையும் (PROVISIONAL DEGREE CEWRTIFICATE) பெற்றுத் தந்தார். வளைகுடா நாட்டிலிருந்த அவரது முகவரிக்கு உடனடியாக அன்னிலைச் சான்றினையும் இணைய வழியாக அனுப்பி வைத்தார்!

 

பொறியல் பட்டப் படிப்புக்கான அன்னிலைச் சான்றினைக் காண்பித்து, அவர் பணி செய்து வந்த நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் நல்லதொரு வேலையையும் பெற்றுவிட்டார் !

 

வேலையும், போதுமான சம்பளமும் அதனால் விளையும் பண வசதியும் உறுதியானதும், மாமனார் வீட்டில் தங்கியிருந்த மனைவியையும் மகளையும் வளைகுடா நாட்டிலிருந்த தனது இருப்பிடத்திற்கு மிகவும் கமுக்கமாக அழைத்துக்கொண்டார். அவருடைய பெற்றோருக்கும் இது தெரியாது; அவருக்கு உதவி செய்த உறவினருக்கும் தெரியாது ! உதவி செய்த உறவினரை நலம் விசாரிக்கக் கூட அவருக்கு மனமில்லாமல் மறந்துபோய்விட்டார் !

 

வளைகுடா நாட்டுக்கு மனைவி, மகளுடன், 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவிட்ட திருமாலழகன், அதன் பின் இந்தியாவுக்கு வரவே இல்லை. அவரது தந்தைக்கு இப்போது அகவை 82. தாயாரின் அகவை 75. இருவரும் எண்கண்ணில் இந்த முதுமைக் காலத்தில் பெற்ற பிள்ளையின் துணையின்றி வாழ்ந்து வருகின்றனர் !

 

தாயாரின் பழக்கம் உறவினர்களுடன் இணக்கமாக இருப்பதில்லை. ஒரு நேரத்தில் அன்பைப் பொழிவார்; மறு நேரத்தில் கடித்துக் குதறுவார். அவரது இந்த மாறுபட்டக் குணமே உறவினர்களை இராமசுப்ரமணியன் – சுவர்ணமாலா இணையருடன் நெருங்க விடுவதில்லை. நெருங்குவோர் மனம் புண்பட்டு விலகிச் செல்ல வைத்துவிடுகிறது !

 

ஒரே மகனின் அணுக்கமும் அன்பும் இவர்களுக்குக் கிடைக்காமல் போனமைக்கு திருமாலழகனின் மனைவியும் ஒரு காரணம். மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுடன் இணக்கமாக பழகத் தெரியாத பேதைப் பெண். மனைவியா, பெற்றோரா என்னும் வினா திருமாலழகன் முன் பூதம் போல் பேருரு எடுத்து நின்றபோது, மனைவியின் பக்கம் சாய்ந்துவிட்டார். அதன் விளைவு, முதுமையில் தள்ளாடும் பெற்றோர், பெற்ற மகனிருந்தும் அவருடன் சேர்ந்து வாழும் கொடுப்பினை இல்லாத தீவினையாளர்கள் ஆகிப் போயினர் !

 

ஓய்வு பெற்ற ஆசிரியரான இராமசுப்ரமணியனுக்குக் கிடைத்துவரும் ஓய்வூதியமே அவருக்கும் அவரது மனைவிக்கும் பசியாற உதவி வருகிறது. சொந்த வீடு ஒரு கோடி உருபா மதிப்புக்கு இருக்கிறது,; இருந்தும் என்ன பயன்? பெற்று வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிவிட்ட பெற்றோரைத் தவிக்க விட்டுவிட்டு சிறகு முளைத்த குஞ்சு பறந்துவிட்டது !

 

திருமாலழகன் திசை மாறிய பறவையாகிப் போனமைக்கு யார் காரணம் ? தந்தையா ? தாயாரா ? மனைவியா ? மனைவியுடன் இணக்கமாகச் செல்ல வேண்டிய அவரது சூழ்நிலையா ? திசை மாறிச் சென்றுவிட்ட பறவை இனித் திரும்பி வருமா ? வறண்ட பாலையாகிவிட்ட பெற்றோரின் முதுமை வாழ்க்கை இனி என்னவாகும் ?

 

உறவினர்களுக்கும் தெரியாது ! உறவினர்களுடன் ஒட்டாமல் விலகி நிற்கும் பெற்றோருக்கும் தெரியாது ! பெற்றோரை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்ட பிள்ளைக்கும் தெரியாது ! இந்த உண்மைக் கதையை எழுதி முகநூலில் வெளியிட்டிருக்கும் எனக்கும் தெரியாது ! ஏன் - இதைப் படிக்கும் உங்களுக்கும் கூடத் தெரியாது !

 

பெற்ற பிள்ளை திசை மாறிச் சென்றுவிட்டால், இது தான் முடிவு !

 -------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றாம் முகநூல்,

[திருவள்ளுவராண்டு: 2054, நளி (கார்த்திகை) 24]

{10-12-2023}

-------------------------------------------------------------------------------------------------