பெற்றோரை மதிக்காத பேதைப் பறவைகள் !

திசை மாறிய பறவை (07)

 

தஞ்சாவூரை அடுத்த வல்லத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியராக உயர்ந்து, 2002 - ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கலையியல் மேதை (M.A), கல்வியியல் மேதை (B.Ed) ஆகிய பட்டங்களுக்குச் சொந்தக்காரர் !!


கல்வித்தரத்திலும், ஒழுங்குக் கட்டுப்பாடுகளிலும் தாழ்ந்து நின்ற பல பள்ளிகளைத் தன் கண்டிப்பான ஆளுமையால் தூக்கி நிறுத்தியவர். தந்தை பெயரின் தலைப்பெழுத்துடன் இணைத்து “வைகோ” என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பெற்றவர் !


தமிழ்ப் புலமையில் தன் அரிய ஆற்றலால் மிளிர்ந்தவர். இலக்கிய மன்றக் கூட்டங்களில் பங்கேற்று தன் பேச்சால் மாணவர்களைக் கவர்ந்தவர். இக்கட்டுரையை எழுதும் நானும் அவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் பயின்றவர்கள் !


பணிவோய்வுக்குப் பிறகு, உடலையும் உள்ளத்தையும் நலமுடன் வைத்துக்கொள்ள வேண்டும், வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது என்பதற்காக வல்லத்தில் சிறு அளவில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார். உதவிக்கு ஒருவரைத் தன்னுடன் வைத்துக்கொண்டு கடையையும் கவனிக்கச் செய்தார் !


இவருடன் இலக்கிய உரையாட;லில் ஈடுபடவேண்டும் என்பதற்காகவே இவரது மருந்துக்கடைக்கு வருவோர் பலர் ! இவருடன் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பலரும் இவரது வாடிக்கையாளர்கள் ஆகினர் ! பெருமளவு வணிகம் நடைபெறவில்லையாயினும், நண்பர்களுடன் உரையாடவும், அன்றாடம் பொழுதுபோக்கவும் மருந்துக்கடை மிகவும் பயன்பட்டது !


இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் என இரு பிள்ளைகள். மகனுக்கு மாலவன் என்றும் மகளுக்கு மணமல்லி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் கோவிந்தசாமி.. மகன் அறிவியல் வாலை, (B.Sc) பட்டப்படிப்புடன் இடைநிலை ஆசிரியப் பயிற்சியும் (D.T.Ed) பெற்றவர். எனினும் எந்த வேலையிலும் அமர்வதில் அக்கறை காட்டாமல் வீணாக ஊர் சுற்றுவதில் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டிருந்தார். மகளைத் தனது சேய்நிலை (தூரத்து) உறவினர் வீட்டுப் பையனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். மாப்பிள்ளை பட்டதாரி ஆசிரியப் பணியில் இருந்தார் !


மகன் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறானே என்று கோவிந்தசாமிக்கும் அவர் மனைவிக்கும் மிகுந்த மனத் துன்பம். மருந்துக் கடையைக் கூடக் கவனித்துக் கொள்ள அக்கறையின்றி இருக்கிறானே என்று அவர்கள் கவலைப்படாத நாளே இல்லை. இந்த நிலையில் நண்பர்களின் கூட்டுறவால் மகன் இளமைப் பருவத்திற்கேயுரிய சில தீய பழக்ககங்களுக்கும் அடிமையானான் !


ஒருநாள் மாலை நேரம், கோவிந்தசாமி தன் வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். மகள்வழிப் பெயர்த்தியின் காதணி விழாவை நடத்துவது பற்றி அவர்கள் கலந்து பேசிக் கொண்டு இருக்கையில், அக்கம் பக்கத்து உறவினர்கள் சிலரும் அங்கு வந்து உரையாடலில் கலந்துகொண்டனர். மகன் மாலவன் அப்பொழுது அங்கு வந்து கோவிந்தசாமியிடம் ஒரு இலட்சம் உருபா பணம் கேட்டு வம்பு செய்யலானான் ! கடன்காரர்கள் நெருக்குகிறார்கள் என்பது அதற்கு அவர் கூறிய காரணம் !


எப்படிக் கடன் வந்தது எனக் கோவிந்தசாமி கேட்க, காரணத்தைக் கூற மாலவன் மறுக்க, இருவருக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு முற்றிப் போனது. கோபத்தின் உச்சிக்குச் சென்ற மாலவன், தன் தாயார் மற்றும் உறவினர்கள் முன்னிலையிலேயே, தான் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றித் தன் தந்தையைப் பலமாகத் தாக்கிவிட்டான். தாக்கப்பட்ட கோவிந்தசாமி மானக் குலைவு உணர்வால் மனம் குன்றிப் போனார் !


மாலவன் அங்கிருந்து வெளியேறி மறைந்தான். உறவினர்கள் செய்வதறியாது திகைத்து, சற்று நேரம் நின்றபின் தத்தம் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். மாலவனின் தாய் கோவிந்தசாமியின் அருகில் அமர்ந்து, மகனின் வரம்பு மீறிய கொடுஞ் செயலை நினைத்துக் கேவிக் கேவி அழுதுகொண்டிருந்தார். வாளாமை வயப்பட்ட கோவிந்தசாமி பேச்சு மூச்சின்றிப் பதினைந்து நிமிடங்களைக் கண்ணீரிலேயே கரைத்தார். பின்னர் நாற்காலியிலிருந்து மெல்ல எழுந்த அவர் வீட்டினுள் சென்றார். சுவர் மாடத்திலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பின்பக்கத்திலிருந்த முந்திரித் தோப்பு நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடந்தார் !


கணவர் முந்திரித் தோப்புக்குச் செல்வதைக் கவனித்த மாலவனின் தாயார், மனதில் ஏதோவொரு உறுத்தல் தோன்ற அவரைப் பின்தொடர்ந்தார். மாலை மணி 6-30 இருக்கும். ஒளி மறைந்து இருள் கவியும் மாலைப் பொழுது. முந்திரித் தோப்பு அவர்கள் இருவரையும் தன்னுள் வாரி அணைத்துக்கொண்டது !


காலைக் கடன் கழிக்க முந்திரித் தோப்புப் பக்கம் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் கூச்சலிட்டுக்கொண்டு அலறியடித்து ஓடிவந்தார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கூச்சல் கேட்டு ஓடிவந்து முந்திரித் தோப்புக்குச் சென்று பார்த்தனர். அங்கே கோவிந்த சாமியும் அவர் மனைவியும், வாயில் தள்ளிய நுரை கடைவாயில் வழிந்து காய்ந்திருக்க, நிலைகுத்திய விழிகளுடன் இறந்து கிடந்தனர் !


ஊரார் வீட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக் கொடுத்து நல்லறிவு புகட்டி, மேலே ஏற்றிவிட்ட ஏணி, தன் பிள்ளையிடம் தோற்றுப் போய் முந்திரித் தோப்பில் தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறது. வீட்டின் காவல் தெய்வமாகத் திகழ்ந்த மனைவி, கணவர் உயிர்விட்டபின் தனக்கென இனி இன்னொரு வாழ்வு இல்லை என்று முடிவு செய்து, அவரது காலடியில் தன் உயிரையும் காணிக்கையாக்கி விட்டார் !


திசைமாறிய பறவை – தந்தையைத் தன் காலணியால் தாக்கி – தனது பெற்றோரின் உயிருக்கே உலைவைத்த தறுதலைப் பறவை – எங்கெங்கோ சுற்றிவிட்டு, காலை 8-00 மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தது; பெற்றோரின் பிணங்களைக் கண்டு, கண்ணீர் வடித்தது ! அது துன்பத்தால் ஊறிவரும் துயரக் கண்ணீரா ? அல்லது தந்தையின் செல்வம் அனைத்தும் இனித் தடையின்றித் தன்னிடம் வந்துசேரும் என்னும் இரக்கமற்ற எதிர்பார்ப்பு உணர்வால் விளைந்த இன்பக் கண்ணீரா ? யாருக்குத் தெரியும் ?

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

திசை மாறிய பறவைகள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054, சிலை (மார்கழி) 07]

{23-12-2023}

----------------------------------------------------------------------------------------------------


 

திசை மாறிய பறவை (06)

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைத் சேர்ந்தவர் சிங்காரவேலு. பொறி.வா.,மேலா.மே. (B.E.,M.B.A) பட்டதாரி. தமிழக அரசுத் துறை ஒன்றில் உயர் பதவி வகித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். அவரது மனைவியின் பெயர் இரமாமணி. முனைவர் பட்டம் பெற்று அரசுக் கல்லூரி ஒன்றில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் !

 

இந்த இணையருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். கார்த்திகைச்செல்வன், சண்முகானந்தம் என்று பெயர். பெண் குழந்தை ஏதும் இல்லை. இருவரையும் பொறியியலில் பட்டதாரியாக்கி (B.E) (பொறி.வா) அழகு பார்த்தனர். பொறியியல் பட்டம் அல்லாது மேலாண்மையியலில் மேதைப் பட்டமும் (M.B.A) பெற வைத்தனர் !

 

பிள்ளைகளின் மேல் அதிக அன்பும் பற்றும் வைத்திருந்த இவ்விணையர், பொறியியலில் மேற்படிப்புப் படிக்க வெளிநாட்டிற்கும் அனுப்பி வைத்தனர். நான்காண்டு இடைவெளியில் அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக வெளிநாட்டுப் படிப்புக்காகச் சென்றதால்,- அண்ணன் வெளிநாட்டில், தம்பி தன் பெற்றோருடன் என்ற நிலையில்சிங்காரவேலுஇரமாமணி இணையருக்கு மனக் கவலையோ, தனிமை உணர்வோ ஏற்படவில்லை !

 

மூத்த பிள்ளை கார்த்திகைச் செல்வனுக்கு  காரைக்குடியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மனைவியானார். திருமணமாகி ஈராண்டிலேயே அவர் தன் மனைவியுடன் அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டு அங்கேயே வாழலானார் !

 

இரண்டாவது பிள்ளை சண்முகானந்தத்திற்கு  சேலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிப் பெண் ஒருவர் மனைவியானார். அவரும் விரைவிலேயே பொருத்தமான ஒரு வேலையைத் தேடிக்கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் வாழலானார் !

 

இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் வரை சிங்காரவேலுவும் இரமாமணியும் தத்தமது அரசுப் பணியில் இருந்தமையால் பிள்ளைகள் இருவரையும் பிரிந்து  வாழ்வதில் அவர்களுக்குப் பெருத்த துன்பமோ, தனிமை உணர்வோ தோன்றவில்லை !

 

பகற் பொழுதில் அலுவலகப் பணி / கல்லூரிப் பணி, இரவில் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளிடம் துழனி (PHONE) வழி உரையாடல் என்று  அவர்களுக்குப் பொழுது போயிற்று. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே நிலைமை மாறிற்று. ஒருவர் பின் ஒருவராக இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர் !

 

முதலில் ஓய்வு பெற்றவர் சிங்காரவேலு. அவர் மனைவி ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகள் இருந்தன. பிள்ளைகள் வெளிநாட்டில், மனைவி கல்லூரியில். சிங்காரவேலு அப்பொழுதுதான் தனிமையின் தாக்கத்தை முழுவதுமாக உணர்ந்தார். !

 

சிங்காரவேலுவுடன் பணிபுரிந்த  ஒருவர், ஒருநாள் அவரைக் காண வீட்டிற்கு வந்திருந்தார். தனிமையின் அழுத்தத்தினால் மனமும் உடலும் சோர்ந்து போயிருந்த அவருக்கு நண்பரின் வருகை பாலைவனச் சோலையைக் கண்டது போல் புத்துணர்வைத் தந்தது. வழக்கமான நலம் உசாவலுக்குப் பின் நண்பர், சிங்காரவேலுவிடம் கேட்டார், “என்ன சிங்காரவேலு ! இப்படித் தனிமையில் அகப்பட்டு உன்னை நீயே வருத்திக் கொள்கிறாய் ! வெளிநாட்டிலிருக்கும் உன் பெயரன் பெயர்த்திகளில் ஓரிருவரை அழைத்துவந்து உங்கள் வீட்டில் வைத்துக்கொண்டால் உனக்கும் உன் மனைவிக்கும் தனிமை உணர்வு தோன்றாதல்லவா ? இங்கேயே அவர்களைப் பள்ளியில் சேர்த்து  நீங்கள் படிக்க வைக்கலாமே  என்றார் !

 

நீண்ட நேரம் பேசாமல் அமைதியாக  இருந்த சிங்காரவேலுவின் கண்களில் நீர் துளும்பிற்று. பிறகு மெல்லப் பேசலானார். ”பெரியவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். 10 மற்றும்  8 அகவையான அவர்களில் யாராவது ஒருவரை இங்கு அனுப்பு, எனக்கும் உன் அம்மாவுக்கும் ஆறுதலாக இருக்கும்; நாங்கள் அக்குழந்தையை இங்கு படிக்க வைக்கிறோம்என்றேன் !

 

என் மனைவி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாள். அவள் படிப்பதற்குத் தரமான பள்ளி அங்கு இருக்காது. அவள் எதிர்காலமே இதனால் பாதிக்கப்படும். ஆகையால் நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் தம்பியிடம் கேட்டுப் பாருங்கள்என்று சொல்லிவிட்டார் !

 

என்னப்பா இப்படிச் சொல்கிறாய் ? நீ இங்கு தானே படித்தாய் ? தரமான கல்வி உனக்கு இங்கு தானே கிடைத்தது. உன் மகளுக்கு மட்டும் இங்கு நல்ல கல்வி கிடைக்காமலா போய்விடும் ? நானும் உன் தாயும் இங்கு தனிமையில் இருப்பதை எண்ணிப்பார்என்றேன் !

 

இல்லையப்பா ! என் மனைவி இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். இனி இதைப் பற்றிப் பேசவேண்டாம்என்று சொல்லிவிட்டார் ! ”சரியப்பாஎன்று சொல்லிவிட்டு, சுவிசர்லாந்தில் இருக்கும் இளைய மகனுடன் பேசினேன். அகவை முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளின் அணுக்கம் இல்லாமல் நாங்களிருவரும் தனிமையில் இருப்பது கொடிய துய்ப்பாக (அனுபவம்) இருக்கிறது. எங்கள் வாழ்நாள் விரைந்து முடிவுக்கு வந்துவிடுமோ என்று அச்சப்படுகிறேன். ஆகையால் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும் பொருட்டு உன் பெண்ணையோ (7 அகவை) அல்லது பிள்ளையையோ (5 அகவை) இங்கு எங்களுடன் இருக்க ஏற்பாடு  செய். நாங்கள் நல்ல பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம்என்றேன் !

 

இல்லையப்பா ! அவர்களில் யாரையும் அங்கு அனுப்ப என் மனைவி சம்மதிக்க மாட்டாள். அதுவுமல்லாமல் அங்குள்ள வெப்பநிலை அவர்களின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. நீங்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் இருக்கும் அண்ணனிடம் கேட்டுப் பாருங்கள்என்று கூறிவிட்டார் !

 

நாங்கள் தனிமையில் இருக்கிறோம்என்பதை எடுத்துச் சொன்னேன்.” ”அதற்கு நான் என்னப்பா செய்ய முடியும் ? நிறைய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சமையலறையில் நீங்கள் அம்மாவுக்கு உதவி செய்யலாமே, நன்றாகப் பொழுது போகும்என்கிறார் இளையபிள்ளை !

 

சரியப்பா ! உன் அண்ணன் 2027 –ல் தான் இங்கு வரமுடியும் என்றும் அதுவரை குழந்தைகள் படிப்பு, மனைவியின் மருத்துவப் பணி  போன்ற பல பிணைப்புகள் உள்ளன என்றும் கூறுகிறார், நீயாவது ஒரு மாத விடுப்பில் குடும்பத்தினருடன் இங்கு வர முயற்சி செய்என்று கேட்டேன். அதற்கு அவர், “இல்லையப்பா ! நானும் 2026 இறுதி வரை அங்கு வர இயலாதுஎன்று  கூறிவிட்டார் !

 

சரியப்பா ! அதற்குள் எனக்கு  ஏதாவது ஆகிவிட்டால், உன் தாயார் ஆதரவற்ற தனிமரமாகிப் போவார். அல்லது எனக்கு முன் உன் தாயார் போய்விட்டால் நான் தனிமரமாகித் தவித்துப் போவேன். இத்தகைய நிலைமையை எண்ணித் தான்  மிகவும் கவலைப் படுகிறேன்என்றேன் !

 

இப்படி நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. எங்கள் நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி உங்களுக்கோ , அம்மாவுக்கோ ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், மாமா மதுரையில் தானே இருக்கிறார். அவர் ஆதரவாக இருப்பார். நாங்கள் வராவிட்டால் என்ன ?” என்று எனக்குத் தன் நிலையைத் தெளிவு படுத்திவிட்டார் !

 

திருமணத்திற்குப் பின் மனைவி கிழித்த கோட்டைத் தாண்டாத கணவனாக என் இரு மகன்களும் மாறிப் போய்விட்டனர். வெளிநாட்டில் கிடைக்கும்  பகட்டான வாழ்க்கையும், பணமும் மகன்கள் இருவரது மனத்தையும் நிறம்மாறச் செய்துவிட்டது ! பிள்ளைகள் இருவரையும் மேற்படிப்புக்காக மேல் நாட்டுக்கு அனுப்பி வைத்தது நாங்கள் செய்த மாபெரும் தவறு என்பதை இப்போது உணர்கிறேன்.  அதன் பலனை இப்போது நாங்கள் துய்க்கிறோம் (அனுபவிக்கிறோம்)“ என்று துன்பியல் உணர்வு மேலோங்க அழாதக் குறையாகச் சொன்னார்  !

 

படிப்புப் பருவம்  வரைஅப்பா ! அம்மா !” என்று எங்கள்    கால்களையே சுற்றிச் சுற்றி வந்த  பிள்ளைகள் இருவரும்  வெளிநாட்டு வாழ்க்கையின் சுவைகண்டு திசை மாறிய பறவைகளாகிவிட்டனர். சிறகு முளைத்துப் பறக்கத் தொடங்கிய பின்  குஞ்சுகள்  தாய்ப் பறவையை நினைத்துப் பார்ப்பதில்லை ! மனித வாழ்வும் அப்படித்தான் போலும்” ! சொல்லி முடித்த பின் சிங்காரவேலுவின் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது !

 

இந்தச் சூழ்நிலையின் வலியால் கண்களில் துளும்பிய நீர் பார்வையை மறைக்க நண்பர் எழுந்து வணங்கிவிட்டு பேசாமலேயே விடைபெற்றுச் சென்றார். இது நடந்து இரண்டு மாத அளவிலேயே சிங்காரவேலுவும் நெஞ்சுவலி என்று படுத்தவர் மீண்டு எழாமலேயே தன் இறுதி மூச்சைத் தொலைத்துவிட்டு அடங்கிவிட்டார் !!

 

குஞ்சுளில் ஒன்று கோதையின் காலடியில் கிடக்கிறது அமெரிக்க நாட்டுக் கலிபோர்னியாவில் ! இன்னொன்று  ஆல்ப்ஸ் மலையின் உச்சியில் அதன் அழகைச் சுவைத்துக்கொண்டு ஆலோலம் பாடிக்கொண்டிருக்கிறது சுவிட்சர்லாந்து நாட்டில் ! தாய்ப்பறவையோ தனிப் பறவையாக, அழுத கண்ணும் வீங்கிய முகமுமாக - மதுரை, திருமங்கலத்தில் ! என்னே மனித வாழ்க்கை !

 

மேனாட்டுப் பணமும் நாகரிகமும்  நம் பிள்ளைகளின் நெஞ்சில் நிறைந்திருக்கும் அன்பையும், பற்றையும் அடியோடு வழித்துத் துடைத்து எறிந்துவிட்டு, அவர்களை விலங்குகளுக்கு இணையாக்கி மகிழும் போலும் ! 

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[maraimani2021@gmail.com]

ஆட்சியர்,

திசை மாறிய பறவைகள்வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054, சிலை (மார்கழி) 01]

[17-12-2023}

-----------------------------------------------------------------------------------------------