பெற்றோரை மதிக்காத பேதைப் பறவைகள் !

பழனியாண்டவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழனியாண்டவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திசை மாறிய பறவை (01)

 

[நிகழ்ச்சிகள் உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன]

 

சோழ மன்னர்களின் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கியது உறையூர்.  இன்று அஃதொரு  சிற்றூராகச் சுருங்கிச் சுருண்டு  கிடக்கிறது. காவிரியின் தென்கரையில்  இன்றைய திருச்சி மாநகரத்தின் ஒரு பகுதியாக, பத்தோடு பதினொன்றாக, நகர வரைபடத்தில் தனக்கும் ஒரு  இடத்தைப்  பிடித்துக் கொண்டு உறையூர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது !

 

இவ்வூரைச் சேந்தவர் மருத்துவர் பழனியாண்டவர். மயிலாடுதுறை அருகிலுள்ள ஏதோவொரு ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வந்து உறையூரில் தன் மருத்துவச் சேவையை ஆற்றி வந்தார் ! M.B.B.S படித்து அரசு மருத்துவராகி, சில பதவி உயர்வுகளையும் பெற்று, இறுதியில் பணி ஓய்வுக்குப் பின் உறையூரில் வாழ்ந்து வந்தார் !ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்று வளர்த்துத் தந்த பின் இவரது மனைவி தன் உயிர் மூச்சை நிறுத்திக்கொண்டார் !

 

மனைவியின் மறைவு என்பது ஒவ்வொரு ஆடவனுக்கும் தன் இரு கைகளையும் இழந்து முடமாகிப் போவதற்கு ஒப்பானது. மருத்துவர் பழனியாண்டவரும் மனைவியின் மறைவுக்குப் பின் மனத்தாலும் உடலாலும் பெரிதும் முடங்கிப் போனார் ! ஓரிரு ஆண்டுகள் உருண்டோடிய பின் மனத்தைத் தேற்றிக்கொண்டு மகனையும் மகளையும் உயர் படிப்பு படிக்க வைப்பதில் கவனம் செலுத்தலானார்!

 

அகவை முதிர்ந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவரை அழைத்து வந்து வீட்டையும் பிள்ளைகளையும்  கவனித்துக் கொள்ளச் செய்தார். தனது முழுக் கவனத்தையும் பிள்ளைகளின் படிப்பின் மீதும், ஏழைகளுக்கு மருத்துச் சேவை செய்வதிலும் செலுத்தலானார்.  பிற மருத்துவர்கள் சேவைக் கட்டணமாக உருபா 100 வாங்கி வந்த நிலையில், இவர் உருபா 10 மட்டுமே வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கலானார். நோயாளிகளிடம் அன்பாகப் பழகி அவர்கள் மனத்தில் நீங்காது நிறைந்து போனார் !

 

நோயாளிகளுக்கு எளிய விலையில் கிடைக்கும் மருந்துகளையே எழுதித் தந்தார். ஏழைகளின் மருத்துவராக விளங்கிய இவர் மருத்துவம் பார்க்க நேரம் எதையும் வரையறுத்துக் கொள்ளவில்லை.

 

மருத்துவம் பார்க்கத் தனது வீட்டின் முன்னறை ஒன்றைப் பயன்படுத்தி வந்தார். முன்றிலில் (இல்லத்தின் முன்பு) வேப்ப மர நிழலில் சாய்வு நாற்காலியில் இயற்கைக் காற்று வாங்கிக் கொண்டு படுத்திருப்பார். நோயாளிகள் வரும்போது முன்னறைக்கு எழுந்து சென்று மருத்துவம் பார்ப்பார்; பிறகு சாய்வு நாற்காலியில் அடைக்கலம் ஆகிவிடுவார் !

 

காலை ஆறு மணிக்குச் சென்றாலும் சரி, இரவு ஒன்பது மணிக்குச் சென்றாலும் சரி, அவர் வீட்டு வாயில், நோயாளிகளுக்காக எந்நேரமும்  திறந்திருக்கும். சொந்தச் சீருந்தும் (CAR), அதை இயக்க வலவரும் (DRIVER) வைத்திருந்தமையால் விரைவு அழைப்புகளை ஏற்று நோயாளியின் இல்லத்திற்கே செல்வதுமுண்டு !

 

பணத்தின் மேல் பற்று வைக்காமல், மனித மனங்களின் மகிழ்ச்சியின் மேல் பற்று வைத்திருந்தார்; ஆகையால் அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்; அவரிடம் செல்லும் நோயாளிகளும் மகிழ்ச்சியாக  மருத்துவம் பார்த்துக்கொண்டு இல்லம் திரும்பினர் !

 

மாலை நேரத்தில் ஒருமணி நேரம் நண்பர்களுடன் நடைப் பயிற்சி செல்லும் வழக்கமுடைய அவர் தனது 75 -ஆம் அகவையிலும் வலிமையான உடலுடன் நலமாக வாழ்ந்து வந்தார். அவரது மகளைத் திருமணம் செய்து கொடுத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தன் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் நெய்வேலியில் வாழ்ந்து வந்தார் !

 

அவரது ஒரே மகன் பொறியல் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர்  அங்கேயே பணியைத் தேடிக் கொண்டதுடன் தனக்கு ஒரு மனைவியையும் தேடிக் கொண்டார். அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் வீட்டுக்கு மாப்பிள்ளையாகிப் போனார் !

 

பெருந்தன்மை மிக்க மருத்துவர் பழனியாண்டவர், மகனின் செயல் கண்டு வருந்தினாலும், மகனையும் மருமகளையும் வெறுக்க வில்லை. அவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டு வாழ்த்தி  மகிழ்ந்தார். ஆண்டுகள் சில உருண்டோடின. பழனியாண்டவருக்கு ஒரு பெயரனும் ஒரு பெயர்த்தியும் பிறந்தனர் !

 

மகனையும் மருமகளையும் திருச்சிக்கு வருமாறு அழைத்தார். இரண்டு குழந்தைகளுடன் 2005 –ஆம் ஆண்டு தந்தையைக் காண மகன் வந்திருந்தார். 15 நாள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்த பழனியாண்டவர், மகன் தன் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றவுடன் தனிமைக் கடலில் வீழ்ந்து  தவித்துப் போனார் !

 

இந்த நிலையில் 2012 –ஆம் ஆண்டில் ஒரு நாள் அவருக்குக் கறுப்பு நாளாக விடிந்தது !  அவரைக் காண வந்திருந்த  மருத்துவ நண்பர் ஒருவர் அவரது உடல் இளைப்பைக் கவனித்துவிட்டு  “என்ன பழனி ! உனக்கு சக்கரை நோய் இருக்கும் போல் தெரிகிறதே “ என்று ஒரு வெடிகுண்டை எடுத்து வீசிவிட்டார் !

 

அதிர்ந்து போன பழனியாண்டவர், குருதி ஆய்வு செய்து கொண்டபோது சக்கரை நோய் (சர்க்கரை என்பது பிழை, சக்கரை என்பதே சரி) உறுதியானது.  மனம் உடைந்து போனார். நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் தானே நோயாளி ஆகிவிட்டதை எண்ணி அவரது  மனம் சுடுமண் கலம்  போலச் சுக்கு நூறாக  நொறுங்கிச் சிதறிப் போனது !

 

மகனுடன் எழினி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தன்னைச்  சக்கரை நோய் தாக்கியுள்ளதாகக் கவலையுடன் எடுத்துச் சொன்னார். 75 அகவையைக் கடந்துவிட்ட அவருக்கு, இந்த முதுமைக் காலத்தில் துணையாக இருக்க மனைவியுமில்லை; மகனோ அமெரிக்காவில்; மகளோ நெய்வேலியில் !

 

பணிப் பெண்ணின் உதவியுடன் நடமாடும்  தான், சக்கரை நோய்க்கு இடமாகி, தனிமைத் துயரில் தனித் தீவில் வாழ்வது போல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று மகனிடம் புலம்பினார். “நீ குடும்பத்துடன் திருச்சிக்கு வந்துவிடு. இந்த முதுமைக் காலத்தில் எனக்குத் துணையாக இரு” என்று வெண்ணெய்யாக மனம் உருகி அழைத்தார்!

 

“சக்கரை நோய் வந்திருக்கிறது என்றால் மாத்திரை மருந்துகள் வாங்கிச் சாப்பிடு. நான் அங்கு வந்து உன்னுடன் தங்கினால் உனக்கு வந்திருக்கும் சக்கரை நோய் நீங்கிவிடுமா? வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் இருக்கும் உனக்காக என் பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாழ்படுத்திக் கொண்டு நான் அமெரிக்காவை விட்டு வர முடியாது” !

 

“பழுத்த இலை உதிர்வதைப் பற்றி நான் கவலைப் பட முடியாது; என்னுடன் இருக்கும்  துளிர் இலைகளின் வளர்ச்சி பற்றி தான் நான் கவலைப் பட முடியும். எழினி மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு என் மன நிம்மதியைக் கெடுத்து விடாதே” !

 

சுட்டு விரலைப் பற்றிக்கொண்டு ”அப்பா ! அப்பா ! “ என்று கொஞ்சிக் கொஞ்சிப் பேசி  தன்னுடன் தளர் நடை பயின்ற இளம் அகவை மகன் எங்கே, அடிக்கடி தொடர்பு கொண்டு என் மன நிம்மதியைக் கெடுத்து விடாதே என்று அன்பை மறந்து பேசும் இன்றைய 40 அகவை மகன் எங்கே?

 

கைதவறி விழுந்துவிட்ட முகம் பார்க்கும் கண்ணாடியாகிப் போனது பழனியாண்டவரின் கனிந்த உள்ளம். திசை மாறிய பறவை இனித் திரும்பி வரப் போவதில்லை ; இனி நான் யாருக்காக வாழவேண்டும்? அவரது எண்ணங்கள் தறிகெட்டு ஓடின ! அவ்வளவு தான் !

 

மறு நாள் நடைப் பயிற்சிக்காகத் தனியாகக் கிளம்பிப் போன பழனியாண்டவர், பயிற்சி முடிந்து வீடு திரும்பவில்லை ! ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன ! அவர் இருக்குமிடம் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை ! எங்கு போனார் என்பதும் தெரியவில்லை ! உயிருடன் இருக்கிறாரா, இல்லையா ? இந்த வினாவுக்கும் யாருக்கும் விடை தெரியவில்லை ! இதில் உள்ளுறையாகப் படிந்து கிடக்கும்  துன்ப நிலை என்ன தெரியுமா ? காணாமற் போய்விட்ட  தந்தையைத் தேடிக் கண்டு பிடிக்க அமெரிக்காவில் இருக்கும் மகன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; இந்தியாவுக்கும் வரவில்லை !

 

பழனியாண்டவர் செய்த தவறு தான் என்ன ? பெற்ற பிள்ளை மீது அளவுகடந்து பற்று வைத்தது தானோ ? பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்னும் சொலவடையைச் சும்மாவா சொல்லியிருப்பார்கள் நம் முன்னோர் ?

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”திசை மாறிய பறவைகள்” வலைப்பூ,,

[திருவள்ளுவராண்டு: 2054, நளி (கார்த்திகை) 03]

{19-11-2023}

-----------------------------------------------------------------------------------------------