தஞ்சாவூரை அடுத்த
வல்லத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து
மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியராக உயர்ந்து, 2002 - ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கலையியல் மேதை (M.A), கல்வியியல் மேதை
(B.Ed) ஆகிய
பட்டங்களுக்குச் சொந்தக்காரர் !!
கல்வித்தரத்திலும், ஒழுங்குக்
கட்டுப்பாடுகளிலும் தாழ்ந்து நின்ற பல பள்ளிகளைத் தன் கண்டிப்பான ஆளுமையால் தூக்கி
நிறுத்தியவர். தந்தை பெயரின் தலைப்பெழுத்துடன் இணைத்து “வைகோ” என்று பலராலும்
அன்புடன் அழைக்கப்பெற்றவர் !
தமிழ்ப்
புலமையில் தன் அரிய ஆற்றலால் மிளிர்ந்தவர். இலக்கிய மன்றக் கூட்டங்களில் பங்கேற்று
தன் பேச்சால் மாணவர்களைக் கவர்ந்தவர். இக்கட்டுரையை எழுதும் நானும் அவரும் ஒரே
பள்ளியில் ஒரே வகுப்பில் பயின்றவர்கள் !
பணிவோய்வுக்குப்
பிறகு, உடலையும்
உள்ளத்தையும் நலமுடன் வைத்துக்கொள்ள வேண்டும், வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது என்பதற்காக வல்லத்தில் சிறு
அளவில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார். உதவிக்கு ஒருவரைத் தன்னுடன்
வைத்துக்கொண்டு கடையையும் கவனிக்கச் செய்தார் !
இவருடன் இலக்கிய
உரையாட;லில்
ஈடுபடவேண்டும் என்பதற்காகவே இவரது மருந்துக்கடைக்கு வருவோர் பலர் ! இவருடன் பணி
புரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பலரும் இவரது வாடிக்கையாளர்கள் ஆகினர் !
பெருமளவு வணிகம் நடைபெறவில்லையாயினும், நண்பர்களுடன் உரையாடவும், அன்றாடம்
பொழுதுபோக்கவும் மருந்துக்கடை மிகவும் பயன்பட்டது !
இவருக்கு ஒரு
மகனும் ஒரு மகளும் என இரு பிள்ளைகள். மகனுக்கு மாலவன் என்றும் மகளுக்கு மணமல்லி
என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் கோவிந்தசாமி.. மகன் அறிவியல் வாலை, (B.Sc) பட்டப்படிப்புடன்
இடைநிலை ஆசிரியப் பயிற்சியும் (D.T.Ed) பெற்றவர். எனினும் எந்த வேலையிலும் அமர்வதில் அக்கறை காட்டாமல் வீணாக ஊர்
சுற்றுவதில் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டிருந்தார். மகளைத் தனது சேய்நிலை (தூரத்து)
உறவினர் வீட்டுப் பையனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். மாப்பிள்ளை
பட்டதாரி ஆசிரியப் பணியில் இருந்தார் !
மகன்
பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறானே என்று கோவிந்தசாமிக்கும் அவர் மனைவிக்கும்
மிகுந்த மனத் துன்பம். மருந்துக் கடையைக் கூடக் கவனித்துக் கொள்ள அக்கறையின்றி
இருக்கிறானே என்று அவர்கள் கவலைப்படாத நாளே இல்லை. இந்த நிலையில் நண்பர்களின்
கூட்டுறவால் மகன் இளமைப் பருவத்திற்கேயுரிய சில தீய பழக்ககங்களுக்கும் அடிமையானான்
!
ஒருநாள் மாலை
நேரம், கோவிந்தசாமி தன்
வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
மகள்வழிப் பெயர்த்தியின் காதணி விழாவை நடத்துவது பற்றி அவர்கள் கலந்து பேசிக்
கொண்டு இருக்கையில், அக்கம் பக்கத்து உறவினர்கள் சிலரும் அங்கு வந்து உரையாடலில்
கலந்துகொண்டனர். மகன் மாலவன் அப்பொழுது அங்கு வந்து கோவிந்தசாமியிடம் ஒரு இலட்சம்
உருபா பணம் கேட்டு வம்பு செய்யலானான் ! கடன்காரர்கள் நெருக்குகிறார்கள் என்பது
அதற்கு அவர் கூறிய காரணம் !
எப்படிக் கடன்
வந்தது எனக் கோவிந்தசாமி கேட்க, காரணத்தைக் கூற மாலவன் மறுக்க, இருவருக்கும்
இடையே நிகழ்ந்த பேச்சு முற்றிப் போனது. கோபத்தின் உச்சிக்குச் சென்ற மாலவன், தன் தாயார்
மற்றும் உறவினர்கள் முன்னிலையிலேயே, தான் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றித் தன் தந்தையைப்
பலமாகத் தாக்கிவிட்டான். தாக்கப்பட்ட கோவிந்தசாமி மானக் குலைவு
உணர்வால் மனம் குன்றிப் போனார் !
மாலவன் அங்கிருந்து
வெளியேறி மறைந்தான். உறவினர்கள் செய்வதறியாது திகைத்து, சற்று நேரம்
நின்றபின் தத்தம் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். மாலவனின் தாய் கோவிந்தசாமியின்
அருகில் அமர்ந்து, மகனின் வரம்பு மீறிய கொடுஞ் செயலை நினைத்துக் கேவிக் கேவி
அழுதுகொண்டிருந்தார். வாளாமை வயப்பட்ட கோவிந்தசாமி பேச்சு மூச்சின்றிப் பதினைந்து
நிமிடங்களைக் கண்ணீரிலேயே கரைத்தார். பின்னர் நாற்காலியிலிருந்து மெல்ல எழுந்த அவர் வீட்டினுள்
சென்றார். சுவர் மாடத்திலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பின்பக்கத்திலிருந்த
முந்திரித் தோப்பு நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடந்தார் !
கணவர் முந்திரித்
தோப்புக்குச் செல்வதைக் கவனித்த மாலவனின் தாயார், மனதில் ஏதோவொரு
உறுத்தல் தோன்ற அவரைப் பின்தொடர்ந்தார். மாலை மணி 6-30 இருக்கும். ஒளி
மறைந்து இருள் கவியும் மாலைப் பொழுது. முந்திரித் தோப்பு அவர்கள் இருவரையும்
தன்னுள் வாரி அணைத்துக்கொண்டது !
காலைக் கடன்
கழிக்க முந்திரித் தோப்புப் பக்கம் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்
கூச்சலிட்டுக்கொண்டு அலறியடித்து ஓடிவந்தார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்
எல்லாம் கூச்சல் கேட்டு ஓடிவந்து முந்திரித் தோப்புக்குச் சென்று பார்த்தனர்.
அங்கே கோவிந்த சாமியும் அவர் மனைவியும், வாயில் தள்ளிய நுரை கடைவாயில் வழிந்து காய்ந்திருக்க, நிலைகுத்திய
விழிகளுடன் இறந்து கிடந்தனர் !
ஊரார் வீட்டுப்
பிள்ளைகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக் கொடுத்து நல்லறிவு புகட்டி, மேலே ஏற்றிவிட்ட
ஏணி, தன் பிள்ளையிடம்
தோற்றுப் போய் முந்திரித் தோப்பில் தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறது.
வீட்டின் காவல் தெய்வமாகத் திகழ்ந்த மனைவி, கணவர் உயிர்விட்டபின் தனக்கென இனி
இன்னொரு வாழ்வு இல்லை என்று முடிவு செய்து, அவரது காலடியில்
தன் உயிரையும் காணிக்கையாக்கி விட்டார் !
திசைமாறிய பறவை –
தந்தையைத் தன் காலணியால் தாக்கி – தனது பெற்றோரின் உயிருக்கே உலைவைத்த தறுதலைப் பறவை
– எங்கெங்கோ சுற்றிவிட்டு, காலை 8-00 மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தது; பெற்றோரின்
பிணங்களைக் கண்டு, கண்ணீர் வடித்தது ! அது துன்பத்தால் ஊறிவரும் துயரக்
கண்ணீரா ? அல்லது தந்தையின்
செல்வம் அனைத்தும் இனித் தடையின்றித் தன்னிடம் வந்துசேரும் என்னும்
இரக்கமற்ற எதிர்பார்ப்பு உணர்வால் விளைந்த இன்பக் கண்ணீரா ? யாருக்குத்
தெரியும் ?
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“திசை மாறிய
பறவைகள்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2054, சிலை (மார்கழி) 07]
{23-12-2023}
----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக