(நிகழ்ச்சிகள்
உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன)
தருமபுரியை
அடுத்த இலக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் நடேசலிங்கம். அரசுப் பணியில் அன்னிலையாக
(TEMPORARY) பணி புரிந்த ஆயிரக் கணக்கானவர்களை வரன்முறைப் படுத்தி, நிலைப் பணிக்கு மாற்றி, அரசு ஆணையிட்டபோது இளநிலை உதவியாளராகப்
பணியேற்றவர்!
ஓசூரில்
உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் தனது சேவையைத் தொடங்கிய நடேசலிங்கம், கடுமையான உழைப்பாளி. அரசு விதிமுறைப் புத்தகங்களையும், அரசு ஆணைகள் அடங்கிய
இருப்புக் கோப்புகளையும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஆழ்ந்து படித்து, விதிமுறைகளை
நன்கு அறிந்த ஒரு பணியாளர் என்று நற் பெயரை
ஈட்டிக் கொண்டவர் !
உயர்
அதிகாரிகளிடம் தனது பணித்திறமையால் நெருக்கமானவர். அரசுப் பணியில் நிலைப்புப் பெற்றவரைப்
பெற்றோர் சும்மா விடுவார்களா ? உறவுக்காரப் பெண்ணொருத்தியை அவருக்குத் திருமணம் செய்து
வைத்தனர். காலப் போக்கில் இரு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன !
ஆண் குழந்தைகள்
பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததும் இருவரையும்
அடுத்தடுத்துப் பட்டயப் படிப்பில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஒருவர் எந்திரப் பொறியியல்
பிரிவிலும் இன்னொருவர் மின்னியல் பிரிவிலும் படித்து, பட்டயம் (DIPLOMA) பெற்றனர்.
இதற்கிடையில் 12 –ஆம் வகுப்பு வரைப் படித்த தன் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம்
என்று நடேசலிங்கம் முடிவு செய்தார் !
அவருடைய
உடன் பிறந்த தங்கை மகன் ஒருவர் ஓசூரை அடுத்த இராயக்கோட்டையில் சிறு கடை ஒன்றை வைத்திருந்தார்.
இளங்கலைப் பட்டப் படிப்பு (B.A.) வரைப் படித்திருந்த அவருக்குத் தன் மகளைத் திருமணம்
செய்து வைக்க நடேசலிங்கம் விரும்பினார். அவர் மனைவியும் அதற்கு உடன்பட்டு, திருமணப்
பேச்சைத் தொடங்கினர் !
இரண்டு
திங்கள் அளவில் நடேசலிங்கத்தின் மகள் செல்வி பூவழகிக்கும், அவரது தங்கை மகன் செல்வன்
செம்பியனுக்கும் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் ஓசூரில் உள்ள செல்வம் திருமண அரங்கில் 1990 –ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது !
நடேசலிங்கம்,
தன் மாப்பிள்ளைக்குத் திருமணச் சீராக உருபா
பத்து இலட்சம் கொடுத்துக் கடையை விரிவாக்கிக்
கொடுத்தார். மணமக்கள் இராயக் கோட்டையில் தனி வீடு பார்த்து புதுக் குடித்தனம் தொடங்கினர்.
அவர்களுடன் மாப்பிள்ளையின் தாயார் கண்மணியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கண்மணியின்
கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் !
இதற்கிடையில்
நடேசலிங்கம் தன் மூத்த மகன் சிந்தனைச் செல்வனுக்கு ஓசூரில் உள்ள ஏதாவதொரு தொழிலகத்தில்
வேலை பெறுவதற்கான முயற்சியில் இறங்கினார். அசோக் லேலண்டு தொழிற்சாலை அருகிலுள்ள வேறொரு
நிறுவனத்தில் சிந்தனைச் செல்வனுக்கு நிலையான வேலை கிடைத்தது – தந்தையின் விடாமுயற்சியால்
!
ஆண்டுகள்
சில உருண்டோடின. இளைய மகனுக்கும் இன்னொரு தொழிலகத்தில் வேலை கிடைத்தது. – தந்தையின்
கடின முயற்சியால் ! ஈராண்டுகளில் அவரும் பணியில்
நிலைப்புப் பெற்றுவிட்டார் ! இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த நடேசலிங்கம்
1999-ஆம் ஆண்டு உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார். அவரது வாழ்க்கைச் சக்கரம் இவ்வாறு
சீராக ஓடிக் கொண்டிருக்கையில், மருமகன் சிந்தனைச் செல்வன் மகளைக் கொடுமைப் படுத்துவதாக
இலைமறை காயாகச் செய்திகள் வரத் தொடங்கின !
கடை வணிகத்தில்
இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், அதிலிருந்து மீளப் பண உதவி செய்ய வேண்டும் என்றும் ஒருநாள்
பூவழகி தந்தையிடம் வந்து கேட்டார். நடேசலிங்கம் உருபா ஒரு இலட்சம் கொடுத்தனுப்பினார்.
பின்னர் இது தொடர்கதையாகிப் போனது. மருமகன் செம்பியன் தன் மனைவியை அனுப்பி மாமனாரிடம்
பணம் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார் !
அரசுப்
பணி என்னும் ஓடத்தில் ஏறி, நீர்ச்சுழி நிறைந்த வாழ்க்கை என்னும் ஆற்றை ஒருவாறாகக் கடந்து வந்த நடேசலிங்கம்
2005-ஆம் ஆண்டு ஓடத்திலிருந்து இறங்க வேண்டி வந்தது. ஆம் ! 2005 –ஆம் ஆண்டு சூலை இறுதியில் பணியிலிருந்து ஓய்வு
பெற்றார். ஓய்வுகாலப் பணப் பயன்களாக மொத்தம் 22 இலட்சம் கிடைத்தது. இந்தப் பணத்திலிருந்து
ஒரு பகுதியைக் கொண்டு இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
திருமணச்
செலவு போக உருபா 12 இலட்சம் அவரது கைவயம் இருந்தது. தங்கை இந்தப் பணத்தைக் கொத்திக்கொண்டு
போய்விடக் கூடாது எனக் கணக்குப் போட்ட சிந்தனைச் செல்வன் வீடுகட்டுவதற்கென பணம் தேவைப்படுவதாகச்
சொல்லித் தந்தையிடம் பணவுதவி கேட்டார். இளைய மகனும் விழித்துக்கொண்டு தன் பங்குக்குத்
தந்தையிடம் வீட்டு மனை வாங்கப் பணம் கேட்டார் !
இன்னொரு
பக்கம் மகள் தனக்கும் உதவி செய்யுமாறு தந்தையை வற்புறுத்தினார். பொறியில் மாட்டிக்கொண்ட
எலியாகிப் போனார் நடேசலிங்கம். 2 இலட்சத்தை
மகளுக்கும் தலா 5 இலட்சம் வீதம் இரு மகன்களுக்கும் கையிலிருந்த பணத்தை முழுவதுமாகப்
பிரித்துக் கொடுத்தார். பணம் கிடைத்தவுடன் இரு மகன்களும் தம் மனைவியருடன் தனிக் குடித்தனம்
சென்றுவிட்டனர். நடேசலிங்கம் எவ்வளவோ முயன்றும்கூட, அவர்கள் தனிக் குடித்தனம் செல்வதைக்
தடுக்க இயலவில்லை !
ஆறு மாதங்கள்
காற்றாகக் கரைந்து போயின. மகள் பூவழகி தன் மகள் இலக்குமியுடன் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டாள்.
கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னால் இனி கணவனுடன் வாழ முடியாது
என்றும் புலம்பி மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள் !
இரு மகன்களும்
இந்தச் சிக்கலில் தங்களால் தலையிட முடியாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டனர். சில பெரிய
மனிதர்கள் துணையுடன் மருமகனுக்கு நல்வழி காட்டி, அறிவுரைகள் சொல்லி மகளின் வாழ்க்கையைச் சீர் செய்ய நடேசலிங்கம் பெரிதும்
முயன்றார். ஆனால் இறுதியில் மகள் பூவழகி வாழாவெட்டியாகத் தந்தை விட்டிலேயே தங்கிவிட்டாள்
!
12-ஆம்
வகுப்பு வரைப் படித்திருக்கும் பூவழகியை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்துவிட எண்ணி, இரு
மகன்களிடமும் நடேசலிங்கம் பணம் கேட்டார். மறுத்துவிட்டனர். உங்கள் மகளை, அவள் வீழ்ந்து
கிடக்கும் பாழுங் கிணற்றிலிருந்து மீட்க எண்ணி எங்களையும் ஓட்டாண்டி ஆக்கிவிடாதீர்கள் ! உங்களுக்கு
உதவ முடியாது !
உருப்படாத
மனிதனைக் கட்டிக் கொண்ட அவள் எங்கள் தங்கையும் அன்று; அவளுக்காக எங்களையும் சுரண்டி
வாழ நினைக்கும் நீங்கள் எங்கள் தந்தையும் அன்று ! சென்றுவிடுங்கள்; இனி நமக்குள் எந்த
உறவும் வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி அவரை அடிக்காத குறையாக விரட்டி விட்டனர்
!
இளம்
பருவத்தில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதும், படித்த பின் வேலை வாங்கித் தர அலையாய் அலைவதும்,
வேலை கிடைத்த பின் திருமணம் செய்து வைப்பதும் மட்டுமே ஒரு தந்தையின் கடமையோ? ”மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான்
கொல் எனும் சொல்” என்னும் வள்ளுவரின் வாக்கு பொய்தானோ ? ( குறளின் பொருள்:- மகன்
தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, “இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ”
என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும் )
வாழாவெட்டியாகிவிட்ட
மகளுக்கும், மகள் பெற்றெடுத்த பெண்குழந்தைக்கும் இனி தாமே பற்றுக்கோடு ! அரசுப் பணியிலிருந்து
ஓய்வு பெற்ற பின்பும், மகளுக்காகவும், பெயர்த்திக்காகவும் ஏதாவது வேலை பார்த்தாக வேண்டும்.
இதோ கைகளில் கல்விச் சான்றுகளுடன் வேலை தேடிப் புறப்பட்டுவிட்டார் நடேசலிங்கம் !
அரிசி
பாதி வெந்த நிலையில் சோறு வடிக்கும் மண்பானையில் விரிசல் விழுந்துவிட்டது. இனி பானையும்
பயன்படாது; சோறும் வேகப் போவதில்லை. சிறகு முளைத்த பின் பறவைகள் பறந்து சென்றுவிட்டன. தந்தைப் பறவை தனி
மரமாகிவிட்டது. வெள்ளந்தியான மனைவியால் அவருக்கு வாழ்க்கையில் வலியுமில்லை; உதவியுமில்லை
! திசை மாறிய பறவைகள் இரண்டும் இனி கூடு திரும்பவா போகின்றன ?
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்,
[திருவள்ளுவராண்டு: 2054, நளி (கார்த்திகை) 10]
{26-11-2023}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக