பெற்றோரை மதிக்காத பேதைப் பறவைகள் !

திசை மாறிய பறவை (02)

 

[நிகழ்ச்சிகள் உண்மை; யாருடைய மனமும் புண்படாதிருக்கும் பொருட்டுப் பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளன]

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரைச் சேர்ந்தவர்  கலியமூர்த்தி. தமிழக அரசுத்துறை ஒன்றில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி பெயர் அமுதா; இல்லத்தரசி. இந்த இணையருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவர் முத்துக்குமார்; இளையவர் சிவகுமார் !

 

இரு குழந்தைகளையும் நல்லொழுக்கமும் நற்குணங்களும் அமைந்தவர்களாக வளர்ப்பதில் இந்த இணையர் முனைப்பாக இருந்தனர். பிள்ளைகளும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வளர்ந்ததுடன் படிப்பிலும் கெட்டிக்காரர்களாகத் திகழ்ந்தனர்! கணினிப் பயன்பாட்டியலில் முதுகலை (M.C.A) வரைப் படித்துப் பட்டம் பெற்ற இருவருக்கும் இடையே அகவை வேறுபாடு மூன்று ஆண்டுகள்தான்!

 

தமிழில் ஆர்வம் கொண்டு கவிதைகள் புனைவதிலும் வல்லவராக இலங்கிய கலியமூர்த்தி பொதுப்பணியிலும் ஈடுபட்டு, தாம் பணிபுரிந்த துறையின் அலுவலர்கள் சங்கத்திலும் முகாமையான பொறுப்பினை ஏற்றுச் செயல்பட்டு ஊரறிந்த வானம்பாடியாக வலம் வந்தார்  !

 

தனது வாழ்க்கை முறைமையை ஒரே சீரான நேர்கோட்டில் அமைத்துக்கொண்டு, அதைப் பின்பற்றிவந்த அவர், உடல் நலம் பேணுவதிலும் குறை வைத்ததில்லை. பணியிலிருந்து ஓய்வு  பெற்றபின் சென்னைக்குக் குடி பெயர்ந்த கலியமூர்த்தி, ஓய்வு காலப் பணப் பயன்களைக் கொண்டு சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கி, மனைவி மற்றும் இரு பிள்ளகளுடன் அங்கு வாழ்ந்து வரலானார் !

 

இருபிள்ளைகளுக்கும் மென்பொருள் (SOFT WARE) துறையில் பணி வாய்ப்புக் கிடைத்தது. நல்ல ஊதியமும் கிடைத்தது. மூத்த பிள்ளை  முத்துக்குமாருக்குத் திருணம் செய்து வைத்திட  கலியமூர்த்தி – அமுதா இணையர் முடிவு செய்தனர். உற்றார் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் எல்லாம் தம்மை முன்னிறுத்திக் கொண்டு உழைப்பதில் ஈடுபாடு காட்டிய இந்த இணையருக்கு, மகனுக்குப் பெண் பார்ப்பதில் உறவினரின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது !

 

முத்துக்குமாருக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடுவதில் கலியமூர்த்தி மிக முனைப்பாக ஈடுபட்டார். அவரது நண்பர்கள் சிலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். ஒரு திருமணம் முடிவாக வேண்டுமென்றால் என்னதான் நண்பர்களின் உதவி இருந்தாலும், உறவினர்களின் பங்களிப்பும் கட்டாயம் தேவை. ஆனால் இதில் கலியமூர்த்திக்கு உறவினர்களின் உதவி போதுமான அளவிற்குக் கிடைத்ததில்லை !

 

திருமணத் தகவல் தொடர்பு மையங்களில் பிறப்பியம் (ஜாதகம்)  கேட்டு அவர் பெருமளவுக்குச் செலவு செய்திருந்தாலும், அதனால் கிடைத்த பயன் மிகக் குறைவே. இறுதியில் ஏதோவொரு வகையில் ஒரு பெண்ணைப் பற்றிய செய்தி கிடைத்தது. அவரது பெற்றோர் நெல்லிக்குப்பத்தில் வாழ்ந்து வந்தனர் !

 

அந்தப் பெண்ணின் பெயர் இளவேனில். அவரது தந்தை ஆனந்தவேல். தந்தை தாய் இருவருமே ஆசிரியர்கள். அந்தப் பெண் சென்னையில்  அரசுத்துறையில்   உதவியாளராக (ASSISTANT)  பணி புரிந்து வந்தார். கலியமூர்த்தி வீட்டாரும், ஆனந்தவேல் வீட்டாரும் கலந்து பேசியதில் ஒருவர்க்கொருவர் பிடித்துப் போயிற்று. திருமணம் முடிவாகி விழுப்புரம் மாவட்டம் மயிலத்திலுள்ள  மண்டபம் ஒன்றில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புத் திருமணம் நடைபெற்றது !

 

முத்துக்குமாரும்  இளவேனிலும் திருமணத்திற்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டு அருகில்  வீடு பார்த்துத் தனிக்குடித்தனம் தொடங்கினர். இருவரும் பணியிலிருந்ததால், பணப்புழக்கத்திற்குப் பஞ்சமில்லை. விடுமுறை நாள்களில் இளவேனிலை அழைத்துக்கொண்டு தனது தாய் தந்தையர் வாழ்ந்துவரும் குரோம்பேட்டைக்குச் சென்று வருவதை முத்துக்குமார் வழக்கமாகக் கொண்டிருந்தார் !

 

காலச்சக்கரம் விரைந்து சுழன்றது. முத்துக்குமார் – இளவேனில் இணையருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு அலுவலகப் பணிகளுடன் குழந்தை வளர்ப்புப் பணியும் சேர்ந்துகொண்டதால் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. முத்துக்குமாரின் தாயார் குழந்தை வளர்ப்பில் ஒத்தாசையாக இருந்ததால் எல்லாப் பணிகளையும் ஒருவாறு சமாளித்து வந்தனர் !

 

முத்துக்குமார் – இளவேனில் இருவருமே அன்றாடம் அலுவலகம் சென்று வருபவர்கள். பணியில் மிகையான  சுமை, சில நேரங்களில் மேலதிகாரிகளின் கண்டிப்பால் ஏற்படும் மனக் காயம், அதனால் விளையும் இறுக்கம் (TENSION) இருவழிப் போக்குவரத்தினால் ஏற்படும்  களைப்பு, எல்லாம் சேர்ந்து இருவரையும் ஒவ்வொரு நாளும் சோர்வடையச் செய்தது !

 

திருமணமான ஒரு ஆடவன், தன் மனைவி தன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு படம் வரைந்து வைத்திருப்பான். அதுபோலவே, மனைவியும், தன் கணவர் எப்படியெல்லாம் தன்னிடம் அன்புகாட்டிப் பழக வேண்டும் என்று தன் மனதிற்குள் படம் வரைந்து வைத்திருப்பாள் !

 

உடலும் மனமும் சோர்வில்லாத நாள்களில் முத்துகுமார் – இளவேனில் இருவரும் வரைந்து வைத்திருந்த மனப் படங்கள் எண்ணியபடியே நடப்புக்கு வந்தன. வீட்டில் மகிழ்ச்சி நிலவியது. ஆனால் அலுவலகம் சென்றுவிட்டுச் சோர்வுடன் வீட்டிற்குத் திரும்பிய நாள்களில், மனப் படங்கள் செயலுக்கு வரவில்லை. உடற்சோர்வும், மனக் களைப்பும் இனிய சூழ்நிலையை விழுங்கி வந்தன. கணவன் – மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் இதுதான் நிகழ்வாய்ப்பு என்பது யாராலும் மறுக்கவியலாத  உண்மை !

 

தான் எதிர்பார்த்தபடி வீட்டுப் பணிகளை மனைவி நிறைவேற்றுவதில்லை என்ற எண்ணம் முத்துக்குமாருக்கும், தன் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் கணவர் நிறைவேற்றுவதில்லை என்ற எண்ணம் இளவேனிலுக்கும் மெல்ல மெல்லத் தோன்றத் தொடங்கின. இருவருக்கும் தம் மனதிற்குள் சிறு விதையாக முளைவிட்ட  இந்த எண்ணம். காலப்போக்கில்  செடியாகி மரமாகி குடும்பம் என்னும் கோட்டையில் விரிசலை ஏற்படுத்தத் தொடங்கியது !

 

ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றைப் பெறமுடியும் என்னும் உண்மையை முத்துக்குமார் – இளவேனில் இருவருமே உணரவில்லை. இருவரும் வேலைக்குச் சென்று மாதந்தோறும் ஒரு இலட்சம் உருபாவுக்கு மேல் ஈட்ட விரும்பினார்களே தவிர,  அதன் பின் விளைவாக வீட்டில் மகிழ்ச்சி குறைந்து சோர்வும், ஏமாற்றமும்  நிலைகொள்ளக்கூடும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறந்துவிட்டார்கள் !

 

அலுவலகப் பணியால் களைப்புற்று வீடு திரும்பும் போது அவர்களது மனதிற்குள் போட்டு வைத்திருந்த படத்தின்படி அன்றாட வாழ்க்கை   அமையவேண்டும் என்று இருவருமே எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்ப்பதும் தவறு. ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்தனர்; வாழ்க்கையில் போதுமான பட்டறிவும், ஒருவர்க்கொருவர் மற்றவரது  நிலை பற்றிய போதுமான புரிதலும் இன்மையால் அவர்களிடையே கருத்து வேறுபாடு உயர்ந்த மரமாக உருவெடுத்து வளர்ந்துவிட்டது !

 

ஒருநாள், இளவேனில், தன் குழந்தையுடன் தந்தை வீட்டிற்குச் சென்றார்; சென்றவர், அங்கேயே தங்கிவிட்டார். திரும்பி வரவில்லை. அவர் மனதைப் புரிந்துகொள்ளத் தவறிய முத்துக்குமார், மனைவி மீது குற்றச் சாட்டுகளை அடுக்கலானார். மனைவியை அழைத்துவர அவர் போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை. இளவேனிலும் தனது கணவருக்குச் தான் சளைத்தவர் இல்லை என்ற நிலை எடுத்து முத்துக்குமார் மீது குற்றச் சாட்டுகளைச் சொல்லலானார் !

 

உணர்ச்சிவயப்பட்ட மனதிற்கு ஞாயம் எதுவென்று புரியாது. முத்துக்குமார் – இளவேனில் இருவருமே தமக்குள் முளை விட்டிருந்த  சிக்கலை உணர்வைக் குழைத்து  அணுகினார்களே தவிர, அறிவின் துணை கொண்டு ஆராயத் தவறினர். இதனால், தான் செய்வதுதான் ஞாயம் என்று இருவருமே நம்பினர் !

 

கணவன் – மனைவி மனவேறுபாட்டை அவர்கள் தாம் ஒருவர்க்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இருவருமே இதில் இணக்கமான நிலை எடுக்கத் தவறினர். விளைவு – முத்துக்குமார் திருமண முறிவு (DIVORCE) கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்தியாவில் எந்த நீதிமன்றமும் விரைவாகத் தீர்ப்புச் சொல்வதில்லை என்னும் உண்மை அவருக்குப் புரியவில்லை. பலிவாங்கும் பூசாரியை நம்பி ஆடு அவர்பின் செல்வது போலப் பணத்துக்காக வாழும் வழக்குரைஞரை நம்பி முத்துக்குமார் அவர் வழியில் நடக்கலானார் !

 

ஞாயத்தை எடுத்துச் சொல்லி நல்ல  தீர்வு காண முயலும் பெற்றோர் உள்பட யாரையும் முத்துக்குமாரும் நம்புவதில்லை; இளவேனிலும் நம்புவதில்லை. முத்துக்குமாரின் அகவை இப்போது 45. இளவேனிலின் அகவை 40. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து முத்துக்குமாருக்கு மணமுறிவுத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்போது அவருக்கு அகவை 50 ஆகிவிடும். அகவை 50 –க்குப் பிறகு அவருக்கு இன்னொரு இல்லற வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என்பதை அவர் சிந்திக்க மறுக்கிறார். அதுபோல் 45 –ஆம் அகவைக்குப் பிறகு இன்னொரு இல்லற வாழ்க்கை தனக்கு அமையுமா என்பதை இளவேனிலும் சிந்திக்க மறுக்கிறார் !

 

வாழ்க்கை என்பது மேடும் பள்ளமும் நிறைந்த சாலை போன்றது. அதில் தான், நாம் இல்லறம் என்னும் வண்டியை ஓட்டிச் சென்றாக வேண்டும். கணவன் – மனைவி இருவரும் ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்றால் தான் வாழ்க்கையை வாழமுடியும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாதாடிக் கொண்டிருந்தால் இல்லற ஓடம் கவிழ்ந்து தான் போகும் !

 

தன் பக்கம் தான் ஞாயம் இருக்கிறது என்னும் பிடிவாத நம்பிக்கையை இருவருமே கைவிட வேண்டும். குடும்பத்திற்குள் நீதிமன்ற நடவடிக்கையை நிகழ்த்திக் காட்ட விரும்பினால்  இந்தியாவில் பெரும்பான்மைக் குடும்பங்களில் கணவன் – மனைவி இருவரும் பிரிந்து தான் வாழவேண்டியிருக்கும். கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவியர் இதோ என்று இவ்வுலகில் யாரையும் சுட்டிக்காட்ட எவராலும் முடியாது. இந்த உண்மையை இருவருமே புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் !

 

இருவரும் செய்கின்ற தவற்றால், அவர்களது வாழ்க்கை மட்டுமல்ல, அவர்கள் குழந்தையின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதை அவர்கள் உணரவில்லை. ”வாழாவெட்டி” என்னும் பட்டத்துடன் இளவேனிலின் வாழ்க்கை பாழாகப் போகிறது. அவரது தாய் தந்தையருக்குப் பிற்காலம் அவர் யாருடைய ஆதரவில் வாழ்வார்,  என்பதை அவர் நினைத்துப் பார்க்க மறுக்கிறார் ! தனித்து வாழும் பெண்களை வெறித்துப் பார்க்கும் இந்த உலகத்தில், ஆதரவற்ற ஒற்றைப் பெண்ணாக அவர் எத்தனை காலத்திற்கு நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியும் என்பதை  எண்ணிப் பார்க்க வேண்டும் !

 

”மனைவியுடன் குடும்பம் நடத்தத் தெரியாத கோழை” என்ற பட்டத்துடன் முத்துக்குமாரின் வாழ்க்கையும் பாழாகப் போகிறது. அவரது தாய் தந்தையருக்குப் பிற்காலம், முதுமைக் காலத்தில்  அவர் யாருடைய ஆதரவில் வாழ்வார் என்பதை அவரும் எண்ணிப் பார்க்க மறுக்கிறார். ஆதரவுக் கரம் நீட்ட மனைவி என்று ஒருத்தி இல்லாவிட்டால், அவரிடம் இருக்கும் பணம் மட்டுமே மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டு வந்துவிடாது என்பதை அவர் உணரவில்லை. அலையில்லாத கடலும் இல்லை; தவறு செய்யாத மனைவியும் இல்லை; தவறுகளைப் பெரிது படுத்திக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது என்பதை அவர் உணர வேண்டும் !

 

இரண்டு பறவைகளும் திசைமாறிப் பறக்கின்றன. பெரியோர் சொல் கேட்டு தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டால் அவர்கள் இழந்து நிற்கும் இல்லற வாழ்க்கையை மீட்டெடுக்கலாம். இல்லையேல் அவர்கள் இருவரது வாழ்க்கையுடன், அவர்களது குழந்தையின் வாழ்க்கையும் சுழியை (சூன்யம்) நோக்கிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது !

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

”திசை மாறிய பறவைகள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054, நளி (கார்த்திகை) 06]

(22-11-2023)

-------------------------------------------------------------------------------------------

 


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக